வீட்டு பத்திரத்தை மறுஅடமானம் வைத்து ரூ.70 லட்சம் மோசடி - நிதி நிறுவனம் மீது பெண் புகார்
கோவையில் வீட்டு பத்திரத்தை மறுஅடமானம் வைத்து ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக நிதி நிறுவனம் மீது பெண் ஒருவர் புகார் அளித்தார்.
கோவை,
கோவை காளப்பட்டி லட்சுமி நகரை சோ்ந்தவர் அரவிந்குமார். இவருடைய மகள் மித்ரா (வயது 29). இவர், தனது தாயாருடன் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அங்கு அவர், அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது மேல் படிப்புக்காக அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கியில் ரூ.14 லட்சம் கடன் பெற்றேன். படித்து முடித்த பின்னர் அந்த கடனை என்னால் திருப்பி செலுத்த முடியவில்லை. கடனை உடனே செலுத்துமாறு வங்கி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனால் நான் கோவையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.22 லட்சம் கடன் பெற்றேன்.
அந்த கடனை 3 மாதத்தில் வட்டியுடன் சோ்த்து கட்டி வீட்டு பத்திரத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என்று நிதி நிறுவனத்தில் கூறினேன்.
இதையடுத்து ரூ.22 லட்சம் மற்றும் அதற்கான வட்டியுடன் வீட்டு பத்திரத்தை மீட்பதற்காக நிதி நிறுவனத்துக்கு சென்றேன். ஆனால் அந்த நிதி நிறுவனத்தினர் பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். இது பற்றி நான் விசாரித்த போது நான் அடமானம் வைத்த வீட்டு பத்திரத்தை நிதி நிறுவனத்தினர் மற்றொரு வங்கியில் அடமானம் வைத்து ரூ.70 லட்சம் வரை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் எனவே நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து எனது வீட்டு பத்திரத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story