பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும்: குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும்: குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Oct 2019 4:48 AM IST (Updated: 19 Oct 2019 4:48 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ராமன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து பேசினர்.

இதையடுத்து விவசாயி சுந்தரம் பேசும்போது, ஓமலூர் பாகல்பட்டி பகுதியில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, கருப்பூர் முதல் கே.ஆர்.தோப்பூர் வரையிலும் உள்ள தரிசு நிலம் மற்றும் புறம்போக்கு நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைத்தால் நல்லதாக இருக்கும், என்றார்.

தலைவாசல் அடுத்த புளியங்குறிச்சியை சேர்ந்த விவசாயி பெருமாள் பேசும்போது, கிராம சாலைகள் அனைத்தும் பழுதடைந்து உள்ளதால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். மலைக்குன்றுகள் அழித்து எம்.சாண்ட் எடுப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவாசல் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு முதல்-அமைச்சரிடம் மனு அளித்தேன். ஆனால் அதன் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும், பதிலும் இல்லை, என்று புகார் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் ராமன், முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்படும், என்றார்.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் பேசும்போது, தமிழகத்தில் கடந்த 2016-2017-ம் ஆண்டு கடும் வறட்சி நிலவியதால், தமிழக அரசு வறட்சி மாநிலமாக அறிவித்தது. அப்போது பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு எதுவும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, இதுவரை வழங்கப்படாமல் உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. வங்கிகளில் கடன் வழங்கும்போது இன்சூரன்ஸ் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த இன்சூரன்ஸ் தொகையை முறையாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால், சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள். அது எந்த நிலையில் உள்ளது என்பது தெரியவில்லை, என்றனர்.

முன்னதாக குறைதீர்க்கும் கூட்டத்திற்கு செய்தியாளர்கள் என்ற பெயரில் 3 பேர் வந்தனர். அவர்களிடம் கலெக்டர் அலுவலகம் மூலம் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை எதுவும் இல்லை. இதுபற்றி அறிந்த உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி கிரு‌‌ஷ்ணமூர்த்தி என்பவர், அவர்களிடம் முறைப்படி அலுவலகத்தில் கடிதம் கொடுக்காமல் எப்படி செய்தி சேகரிக்க வந்தீர்கள்? என கேட்டார். அதற்கு அவர்கள் இணையதளம் மூலம் வெளியாகும் பத்திரிகையின் செய்தியாளர் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கும், உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் அங்கு வந்து 3 பேரையும் வெளியே அழைத்து சென்று விசாரணை நடத்தினார்.


Next Story