“மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது” நாங்குநேரி பிரசாரத்தில் சரத்குமார் கடும் தாக்கு
“பழிவாங்கும் உணர்வுடன் இருக்கும் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது“ என்று நாங்குநேரி தொகுதி பிரசாரத்தில் சரத்குமார் கடுமையாக தாக்கி பேசினார்.
நெல்லை,
நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தார். 3-வது நாளாக நேற்றும் பாளையங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலகுளத்தில் பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் பர்கிட் மாநகரம், தோணித்துறை, பாளையஞ்செட்டிகுளம், ரெட்டியார்பட்டி, ஆரைக்குளம், ஓமநல்லூர், திடியூர், சிதம்பராபுரம் ஆகிய ஊர்களில் வாக்கு சேகரித்த அவர், மாவடியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
ரெட்டியார்பட்டியில் நடந்த பிரசாரத்தின்போது சரத்குமாரை அமைச்சர் செல்லூர் ராஜூ, வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். அங்கு சரத்குமார் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு உயர்வு என்பதற்கு ரெட்டியார்பட்டி நாராயணனே உதாரணம் ஆவார். அ.தி.மு.க.வின் சாதாரண தொண்டரான அவர் தற்போது நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். நானும், அ.தி.மு.க. உடன் கடந்த 10 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். அ.தி.மு.க.வுக்கு உற்ற துணையாக ச.ம.க. உள்ளது. எனக்கும், அ.தி.மு.க.வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
1972-ம் ஆண்டு கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர். முதன்முதலில் தி.மு.க. மீது ஊழல் புகார் அளிக்க கவர்னர் மாளிகை நோக்கி சென்றபோது நானும் உடன் சென்றேன். ஜெயலலிதா உடன் 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக பணிபுரிந்து உள்ளேன். ஜெயலலிதா மக்கள் நலன் குறித்து எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டே இருப்பார். அவர் சட்டசபைக்கு வரும்போது 110-வது விதியின் கீழ் மக்கள் நலத்திட்டங்களை சரமாரியாக அறிவிப்பார். தாய்மார்கள் பாலூட்டுவதற்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்று சிந்தித்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா இறந்த பிறகு 2 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வந்தார். ஸ்டாலின் தினமும் ஏதாவது உளறி வருகிறார். ஆட்சிக்கு வரவேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும். அதை விடுத்து, ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர்களை கைது செய்வதாக கூறுகிறார். அவர் பழிவாங்கும் உணர்வுடன் இருக்கிறார். இந்த உணர்வு இருக்கும் வரை ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது. இந்த ஆட்சியை குறைகூற அவருக்கு தகுதி கிடையாது.
நாங்குநேரி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார், மத்திய மந்திரி கனவில் கன்னியாகுமரிக்கு ஓடிவிட்டார். தனது பணியை சிறப்பாக முடிக்காதவர், மற்றொரு பணியை எடுக்கக்கூடாது. அவரால் நாங்குநேரி தொகுதியில் மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது.
நாங்குநேரி தொகுதி சிறப்பாக மேம்படவும், தொழில் வளம் பெருகவும், வேலைவாய்ப்பு கிடைக்கவும் ஆளும்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனும், நானும் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர்கள். அவர் என்னுடன் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று இருக்கிறார். கடும் உழைப்பாளியான அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில், ச.ம.க. மாநில மாணவர் அணி செயலாளர் நட்சத்திர வெற்றி, மாவட்ட செயலாளர் செங்குளம் கணேசன், கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story