சீமானை கைது செய்ய வேண்டும் - எச்.ராஜா பேட்டி


சீமானை கைது செய்ய வேண்டும் - எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 21 Oct 2019 3:30 AM IST (Updated: 21 Oct 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

சீமானை கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

அன்னவாசல், 

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பஞ்சமி இட விவகாரத்தில் ஸ்டாலின் ஏன் இதுவரையில் அந்த இடத்தின் மூல பத்திரத்தை வெளியிடாமல் பட்டாவை மட்டும் வெளியிட்டார். இதன் மூலம் தி.மு.க.வின் சொத்துகள் அனைத்துமே பஞ்சமி நிலங்களை அபகரித்து வாங்கப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஸ்டாலின் முதலில் மூல பத்திரத்தை காட்டட்டும், அப்புறம் ராமதாஸின் கேள்விக்கு பதில் கூறட்டும். தி.மு.க. வின் சொத்துகள் அனைத்தையும் தமிழக அரசு ஆய்வு செய்து விசாரணை செய்ய வேண்டும். கடந்த காலத்தில் அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் இருந்தது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் துறையை தி.மு.க.விற்காக தான் உருவாக்கினார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு தேசத்துரோகி, தமிழக அரசு அவரை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக சீமான் இதுவரை என்ன செய்துவிட்டார். சீமானை போன்ற தீய சக்திகள், பிரிவினைவாதிகள் சமுதாயத்தில் நடமாட அருகதை இல்லாதவர்கள். தமிழ் சமுதாயத்தின் எதிரி சீமான். தமிழ் மக்களை திசை திருப்புவதற்காக தற்போது சீமான் இதுபோன்ற கருத்துக்களை பேசி வருகிறார். நாளை (இன்று) நடைபெற உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் தி.மு.க. படுதோல்வி அடைந்து, இந்த தேர்தலுடன் தி.மு.க.வின் சகாப்தம் ஒரு முடிவுக்கு வரப்போகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story