சேலத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்


சேலத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 22 Oct 2019 10:45 PM GMT (Updated: 22 Oct 2019 7:43 PM GMT)

வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம், 

வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, பணம் டெபாசிட், பணம் எடுத்தல் போன்ற வங்கி சேவை பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதனிடையே வங்கிகள் இணைப்பை கண்டித்து, சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே பல்வேறு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாவட்ட தலைவர் பாலு முன்னிலை வகித்தார்.

இதில் வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பொதுத்துறை வங்கிகளை இணைத்தது ஏன்? வாராக்கடன் சதவீதத்தை குறைத்து காட்ட வேண்டும், இதன் விளைவுகளால் கலங்குவது பொதுமக்களும், சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் தான் என்பன உள்பட பல்வேறு கோ‌‌ஷங்களை அவர்கள் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில், வங்கிகளின் இணைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. இதற்கு அதிகாரிகள் சங்கங்களும் தார்மீக ஆதரவு தெரிவித்துள்ளன. வங்கி இணைப்பை கைவிடாவிட்டால் அடுத்து தொழிற் சங்கங்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பண பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் முடங்கியது என்றார்.

Next Story