தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் ஊருக்கு செல்ல சிறப்பு ஏற்பாடு: கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பறிமுதல்


தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் ஊருக்கு செல்ல சிறப்பு ஏற்பாடு: கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Oct 2019 11:15 PM GMT (Updated: 23 Oct 2019 4:38 PM GMT)

தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் ஊருக்கு செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர்,

தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 போக்குவரத்துக் கழகங்களிலும், குறைந்த தூரம் பயணிக்கக் கூடிய பஸ்களில் குளிர்சாதன வசதிகொண்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒருபுறம் மூன்று இருக்கைகளும், மறுபுறம் இரண்டு இருக்கைகளுடன் கூடியதாகும். கும்பகோணம், சேலம், நெல்லை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய போக்குவரத்து கழகங்களுக்கு தலா 10 பஸ்களும், விழுப்புரம் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்திற்கு தலா 50 குளிர்சாதன பஸ்களும் இயக்கப்படும். அந்தந்த போக்குவரத்துக்கழகங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிறப்பாக பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படும்.

முதன்முதலாக பரிசோதனை முறையில் திருவண்ணாமலை முதல் சென்னை வரை விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் இருந்து இயக்கப்பட்ட இரண்டு குளிர்சாதன பஸ்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்திலும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் போக்குவரத்து கழகத்தை நவீனமயமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 5 ஆயிரம் புதிய பஸ்கள் போக்குவரத்து கழகத்தில் சேர்க்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளது. தற்போது 2 ஆயிரம் புதிய பஸ்களை வாங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய பஸ்கள், குளிர்சாதன பஸ்கள், கழிவறையுடன் கூடிய பஸ்கள் என நவீனமயமாக்கப்பட்ட போக்குவரத்து கழகமாக, இந்திய துணைக்கண்டத்திலேயே தமிழக போக்குவரத்து துறை திகழ்கிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் பயணச்சீட்டுக்கான சிறப்பு கவுண்ட்டர்கள் நாளை (அதாவது இன்று) தொடங்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் ஊருக்கு செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண்டிகை முடிந்த பிறகும் பொதுமக்கள் பாதுகாப்பாக சிரமமில்லாமல் திரும்பி செல்ல தேவையான பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்கப்படுகிறது. 20 சதவீத போனஸ் நாளை (அதாவது இன்று) முதல் வழங்கப்படும்.

தமி்ழ்நாடு போக்குவரத்து துறையும், காவல் துறையும் இணைந்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் நெடுஞ்சாலைகளில் ரோந்து செல்லும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள். அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூல் செய்யும் வாகனங்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட வாகனம் சிறைபிடிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி பண்டிகை கூட்ட நேரத்தில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பஸ் பறிமுதல் செய்யப்படும். மின்சார பஸ்கள் தனியார்மயம் என்பது கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story