மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கியதாக புகார் அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்யக் கோரி சாலை மறியல்


மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கியதாக புகார் அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்யக் கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 23 Oct 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கியதாக புகார் கூறப்பட்ட அ.தி.மு.க. பிரமுகரை உடனடியாக கைது செய்யக் கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய அ.தி.மு.க. பொருளாளராக பதவி வகித்த செல்வராஜ் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் செல்வராஜை உடனடியாக கைது செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக ஆண்டிமடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் சுகந்தி, துணை செயலாளர் கீதா ஆகியோர் தலைமையில், அச்சங்கத்தினர் ஆண்டிமடம் நான்கு ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை, நஷ்ட ஈடு வழங்கக்கோரியும், நீதி கேட்டும், அந்த பெண்ணின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மற்றும் தலைமறைவாக உள்ள செல்வராஜை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

திடீரென்று சாலை மறியல்

இதையடுத்து அவர்கள் திடீரென்று ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் அவர்களிடம் மறியலை கைவிடாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தார். ஆனாலும் அவர்கள் மறியலை கைவிடாமல் செல்வராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு மாதர் சங்கத்தினர் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story