போடியில் விஷம் குடித்து தாய்- 2 மகள்கள் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக தம்பதி உள்பட 4 பேர் கைது


போடியில் விஷம் குடித்து தாய்- 2 மகள்கள் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக தம்பதி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2019 4:15 AM IST (Updated: 24 Oct 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

போடியில் விஷம் குடித்து தாய் மற்றும் 2 மகள் இறந்த சம்பவத்தில், அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

போடி, 

போடி காந்தி நகரை சேர்ந்தவர் பால்பாண்டி. இவருடைய மனைவி லட்சுமி (வயது 36). இவர்கள் சென்னை வளசரவாக்கத்தில் அரிசி கடை நடத்தி வந்தனர். இவர்களுக்கு அனுசுயா (16), ஐஸ்வர்யா (14), அக்‌ஷயா (10) ஆகிய 3 மகள்கள் இருந்தனர். பால்பாண்டி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். இதையடுத்து சென்னையில் இருந்து போடி காந்தி நகருக்கு வந்து லட்சுமி தனது மகள்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3-ந்தேதி லட்சுமி தனது மூன்று மகள்களுக்கும் விஷம் கொடுத்து விட்டு, தானும் குடித்தார். இதில் அனுசுயா, ஐஸ்வர்யா ஆகியோர் இறந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லட்சுமி, அக்‌ஷயா ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி இறந்தார். அக்‌ஷயாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த 2-ந்தேதி இரவு போடியை சேர்ந்த பாண்டியன், அவருடைய மனைவி தனலட்சுமி, உறவினர்கள் விஜயகுமார், செல்லத்தாய், அம்பிகா ஆகியோர் லட்சுமி வீட்டுக்கு சென்றனர். அங்கு லட்சுமிக்கும், அவர்களுக்கும் இடையே ஏற்கனவே இருந்த பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் தகாத வார்த்தையால் அவர்கள் பேசியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த லட்சுமி தானும் விஷம் குடித்து, மகள்களுக்கும் விஷம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக பாண்டியன், அவருடைய மனைவி உள்பட 4 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி வழக்குப்பதிவு செய்தார். பின்னர் அவர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story