இந்த ஆண்டில் இதுவரை வேலூர் மாவட்டத்தில் 114 பேர் குண்டர் சட்டத்தில் கைது - அதிகாரிகள் தகவல்


இந்த ஆண்டில் இதுவரை வேலூர் மாவட்டத்தில் 114 பேர் குண்டர் சட்டத்தில் கைது - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 24 Oct 2019 10:30 PM GMT (Updated: 24 Oct 2019 5:32 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை 114 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றச்செயல்களை தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். திருட்டு, கொலை, வழிப்பறி, ஆள் கடத்தல், சாராயம், மதுவிற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைக்கின்றனர்.

இவ்வாறாக ஜெயிலில் அடைக்கப்படும் நபர்கள் ஜாமீனில் அல்லது தண்டனை காலம் முடிந்து வெளியே வருகின்றனர். அவர்கள் திருந்தி வாழாமல் தொடர்ந்து அதே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தால் ஓராண்டு காலம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை சாராயம், மது விற்பனை, மணல் கடத்தல், கொலை, திருட்டு, ஆள் கடத்தலில் ஈடுபட்ட 114 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சாராயம், மது விற்பனை செய்த 30 பேரும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 12 பேரும், திருட்டு, வழிப்பறி, ஆள்கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 72 பேரும் என மொத்தம் 114 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story