தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீலகிரியில் 104 சிறப்பு பஸ்கள் இயக்கம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீலகிரியில் 104 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 25 Oct 2019 3:30 AM IST (Updated: 24 Oct 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீலகிரியில் 104 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

ஊட்டி, 

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பட்டாசு கடைகள் போடப்பட்டு உள்ளன. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் பட்டாசுகள், இனிப்புகள் வாங்க ஊட்டிக்கு அதிகளவில் வந்து செல்கிறார்கள். மேலும் புத்தாடைகள் எடுத்து செல்வதை காண முடிகிறது. நீலகிரியில் தேயிலை தோட்டங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானம் உள்ளிட்ட வேலைகளில் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணிபுரிகின்றனர்.

அவர்கள் தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பத்தினரோடு கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். மேலும் ஊட்டியில் தங்கி படித்து வரும் கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு செல்வார்கள். தற்போது தீபாவளிக்கு அடுத்த நாளான 28-ந் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. அதனால் ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறும்போது:- நீலகிரி மாவட்டத்தில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 104 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து ஊட்டிக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் வருகையை பொறுத்து டிக்கெட் முன்பதிவு செய்யப்பட இருக்கிறது. இதுதவிர கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டால், கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பொதுமக்கள் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே அரசு பஸ்கள் மற்றும் தனியார் மினி பஸ்களில் பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது. அவை வெடிக்கும் தன்மை உடையதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மீறி கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த பஸ் கண்டக்டர், டிரைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story