குமரி மாவட்டத்தில் 6–வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு நோயாளிகள் அவதி


குமரி மாவட்டத்தில் 6–வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 30 Oct 2019 4:37 PM GMT)

குமரி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 6–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 25–ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தமிழக அரசு டாக்டர்கள் சங்கமும் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தது. தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு டாக்டர்கள் பணியிடங்களை அரசாணைப்படி அமல்படுத்துவது அவசியம், பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்துடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை நேற்று முன்தினம் வாபஸ் பெற்றனர்.

6–வது நாளாக...

ஆனாலும் அனைத்து அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்படவில்லை. எனவே தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் நேற்றும் நடந்தது. அதே போல குமரி மாவட்டத்திலும் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் 6–வது நாளாக நீடித்தது. நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பணிக்கு செல்லவில்லை.

மேலும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் டாக்டர் சுரேஷ்பாலன் தலைமை தாங்கினார். ஏராளமான டாக்டர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

நோயாளிகள் அவதி

இதுபற்றி டாக்டர் சுரேஷ்பாலனிடம் கேட்டபோது, “வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து தமிழக அரசு டாக்டர்கள் சங்கம் மட்டும் தான் வாபஸ் பெற்று உள்ளது. ஆனால் எங்களது சங்கம் வாபஸ் பெறவில்லை. எனவே எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும். குமரி மாவட்டத்தில் சுமார் 400 டாக்டர்கள் உள்ளனர். இதில் எங்களது கூட்டமைப்பில் மட்டும் 300 டாக்டர்கள் இருக்கிறார்கள். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் சுமார் 180 டாக்டர்கள் எங்களது சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் யாரும் இன்னும் பணிக்கு செல்லவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்“ என்றார்.

அரசு டாக்டர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அவசர சிகிச்சைகள் மற்றும் உள்நோயாளிகளுக்கான சிகிச்சைகள் நடைபெறுகிறது. புற நோயாளிகள் பிரிவில் சில டாக்டர்கள் மட்டுமே வந்திருந்தனர். இதனால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டியது இருந்ததால் அவதிக்குள்ளானார்கள்.


Next Story