திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் வேலைநிறுத்தம் 6-வது நாளாக நீடிப்பு


திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் வேலைநிறுத்தம் 6-வது நாளாக நீடிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 30 Oct 2019 5:15 PM GMT)

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் நேற்று 6-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அரசு ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்தது.

திருவாரூர்,

கிராமப்புறங்களில் சேவை செய்த அரசு டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். பட்ட மேற்படிப்பு டாக்டர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 25-ந் தேதி தொடங்கினர்.

நேற்று 6-வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நோயாளிகள் அவதி

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாரதிதாசன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் கூறுகையில், கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தினால் மருத்துவ பணிகள் பாதிக்கப்பட்டதால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story