சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை: திருநீர்மலை-திருமுடிவாக்கம் தரைப்பாலம் உடைந்தது


சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை: திருநீர்மலை-திருமுடிவாக்கம் தரைப்பாலம் உடைந்தது
x
தினத்தந்தி 31 Oct 2019 4:30 AM IST (Updated: 31 Oct 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்ததால் திருநீர்மலை-திருமுடிவாக்கம் இடையே அடையாறு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை-திருமுடிவாக்கம் இடையே அடையாறு ஆற்றில் குறுகலாக இருந்த பாலத்தை இடித்துவிட்டு ரூ.2 கோடியே 63 லட்சத்தில் அகலமான பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக அதன் அருகேயே மண்ணால் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வந்ததால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்த மண்ணால் ஆன தற்காலிக தரைப்பாலம் உடைந்து, பாலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் திருநீர்மலை-திருமுடிவாக்கம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. திருமுடிவாக்கம், பழந்தண்டலம் பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் திருநீர்மலையில் இருந்து அந்த பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தரைப்பாலம் சீரமைக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்த பொதுபணித்துறையினர், அதுவரையில் பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.

இந்தநிலையில் தாம்பரத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, தான்தொகுதி மக்களிடம் இருந்து பெற்ற கோரிக்கை மனுக்களை வழங்கி, அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி, எஸ்.ஆர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்

பின்னர் நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

திருமுடிவாக்கம்-திருநீர்மலை இடையே உடைந்ததாக கூறப்படுவது தரைப்பாலம் இல்லை. அது கூடுதலாக அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலை. அந்த இடத்தில் உள்ள குறுகலான பாலத்தை அகற்றிவிட்டு அகலமான பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் வசதிக்காக அருகில் அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலைதான் அது.

அடையாறு ஆற்றில் அதிகளவில் மழைநீர் சென்றதால் சாலை முழுமையாக மூழ்கிவிடக்கூடாது என்பதற்காக அதன் ஒரு பகுதியை நெடுஞ்சாலைத்துறையினர் உடைத்து விட்டு உள்ளனர். மழை நின்ற பிறகு அடையாறு ஆற்றில் ஓடும் தண்ணீரின் அளவு குறைந்த பிறகு உடைக்கப்பட்ட சர்வீஸ் சாலை சீரமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story