தொழிலாளி கொலை வழக்கு: 5 பேர் கைது கோர்ட்டில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


தொழிலாளி கொலை வழக்கு: 5 பேர் கைது கோர்ட்டில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 Oct 2019 4:45 AM IST (Updated: 31 Oct 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் தொழிலாளி கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையொட்டி கோர்ட்டில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை வடக்குவாசல் பொன்றிபாளையத்தை சேர்ந்தவர் விஜி என்ற விஜயன்(வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வடக்கு வாசல் சிரேஸ்சத்திரம் சாலையில் உள்ள கங்காநகரை சேர்ந்தவர் சங்கர்(38). இவர், டிரம்ஸ் மற்றும் குளிர்பதன சவப் பெட்டியை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

விஜயனுக்கும், சங்கருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இவர்கள் இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். சம்பவத்தன்று காலை சங்கர், விஜயனுக்கு போன் செய்து நாம் இருவரும் சமாதானமாக போய் விடுவோம். இது தொடர்பாக பேசவேண்டும். எனவே எனது வீட்டுக்கு வா என்று விஜயனை அழைத்துள்ளார். அதன்படி சங்கர் வீட்டிற்கு வந்த விஜயன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

5 பேர் கைது

இதையடுத்து ஆத்திரம் அடைந்த விஜயனின் உறவினர்கள் சங்கரின் வீட்டிற்கு தீ வைத்தனர். இதில் 3 மோட்டார்சைக்கிள்களும் எரிந்து சாம்பல் ஆனது. இது தொடர்பாக தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ், பிரதீப், கோழி தினேஷ், கோபிநாத் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படையினர் சங்கர், ஆகாஷ், பிரதீப், கோழி தினேஷ், கோபிநாத் ஆகிய 5 பேரையும் கைது செய்து நேற்று மதியம் தஞ்சை முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கருணாநிதி, வழக்கை விசாரித்து 5 பேரையும் வருகிற 13-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோர்ட்டில் போலீசார் குவிப்பு

கொலையாளிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வடக்குவாசல் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. சங்கர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் முன்னின்று கோவில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளனர். இது விஜயன் உள்ளிட்டவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் கோவில் விழாவை நாங்கள் தான் நடத்துவோம். நீ இதில் இருந்து விலகிக்கொள் என்று சங்கரை மிரட்டி உள்ளனர். இல்லையென்றால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம் எனவும் கூறி உள்ளனர்.

இதனால் தன்னை கொலை செய்து விடுவார்கள் என பயந்து சங்கர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து விஜயனை சமாதானம் பேசலாம் என அழைத்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.


Next Story