புதுக்கோட்டையில் பலத்த மழை சாந்தநாத சுவாமி கோவிலில் வெள்ளம் புகுந்தது


புதுக்கோட்டையில் பலத்த மழை சாந்தநாத சுவாமி கோவிலில் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 31 Oct 2019 4:00 AM IST (Updated: 31 Oct 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந் நிலையில் நேற்றும் பலத்த மழை பெய்தது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந் நிலையில் நேற்றும் பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளின் மழை நீர் தேங்கியது. வடக்கு ராஜ வீதி, மேல ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, பூக்கடை சந்து, திலகர் திடல் போன்ற பகுதிகளில் சாலையில் மழை நீர் ஆறாக ஓடியது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென பெய்த பலத்த மழையின் காரணமாக சாந்தநாத சுவாமி கோவிலுக்கும் மழை வெள்ள நீர் புகுந்தது. கோவிலில் சுவாமி-அம்மன் மூலஸ்தானத்திற்குள் வெள்ளம் புகுந்தது. நேரம் செல்ல செல்ல தண்ணீரின் அளவு அதிகரித்ததை தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவிலின் நடை அடைக்கப்பட்டது. இதனால் கந்தசஷ்டி விரதம் மேற்கொண்டு கோவிலுக்கு வந்தவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதை அறிந்த கோவில் நிர்வாக அதிகாரி ராமராஜா, கோவில் மேற்பார்வையாளர் ராஜேந்திரன் விரைந்து வந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் நகராட்சி பணியாளர்களுடன் சேர்ந்து ஈடுபட்டனர். அதேபோல் வசந்தபுரி நகர், சிவகாமி ஆச்சிநகர், பாரத்நகர் உள்ளிட்ட விரிவாக்க குடியிருப்பு பகுதிகள் மற்றும் வேளாண் விற்பனை குழு அலுவலகம் மற்றும் காட்டு புதுக்குளத்தில் மழை நீர் சூழ்ந்தது.

Next Story