சேலத்தில் 6-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்
சேலத்தில் 6-வது நாளாக அரசு டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று 6-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது.
அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகளில் வழக்கமான சிகிச்சை பணிகள் பாதிக்கப்பட்டன. உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளும் பாதிக்கப்பட்டதால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் கூறுகையில், அரசுக்கு ஆதரவாக உள்ள ஒரு சங்கம் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடக்கும். எங்களது சங்கத்தில் 90 சதவீதம் அரசு டாக்டர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலான டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும், என்றனர்.
Related Tags :
Next Story