கர்நாடக அரசியலில் பரபரப்பு: முதல்-மந்திரி எடியூரப்பா-குமாரசாமி திடீர் சந்திப்பு, பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கைகோர்க்க திட்டமா?


கர்நாடக அரசியலில் பரபரப்பு: முதல்-மந்திரி எடியூரப்பா-குமாரசாமி திடீர் சந்திப்பு, பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கைகோர்க்க திட்டமா?
x
தினத்தந்தி 1 Nov 2019 10:57 PM GMT (Updated: 1 Nov 2019 10:57 PM GMT)

முதல்-மந்திரி எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் திடீரென நேரில் சந்தித்து பேசினர். இதனால் பா.ஜனதா - ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் மீண்டும் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதா? என்று கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடைபெற்றது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைந்தது.

குமாரசாமி ஆட்சியில் இருந்தபோது, விவசாய கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு சிக்கல்களை சந்தித்தார். அப்போது அவரை, எடியூரப்பா கடுமையாக குற்றம்சாட்டி பேசி வந்தார். கர்நாடக சட்டசபை கூட்டங்களில் தேவேகவுடா மற்றும் குமாரசாமியை, எடியூரப்பா குறை கூறினார்.

மேலும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கும் நோக்கத்தில் எடியூரப்பா பேரம் நடத்தியதாக ஒரு ஆடியோ உரையாடல் பதிவை குமாரசாமி வெளியிட்டார். இது எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் எடியூரப்பாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே கடும் விரோத போக்கு உண்டானது. எடியூரப்பா அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்று பேசிய குமாரசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, பா.ஜனதா அரசை கவிழ விட மாட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து எடியூரப்பா எந்த கருத்தையும் கூறவில்லை. ஏனென்றால் 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா குறைந்தது 6 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை 6 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால், பா.ஜனதா அரசு கவிழும் நிலை உண்டாகும். அதுபோன்ற நிலை ஏற்பட்டால் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஆதரவை பெறுவது குறித்து பா.ஜனதா ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் சந்தித்து பேசினர். சிறிது நேரம் மட்டுமே நீடித்த இந்த சந்திப்பின்போது, அரசியல் ரீதியாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) மீண்டும் கைகோர்த்து செயல்படுவது குறித்து திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது, முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா உடன் இருந்தார். கடும் விரோத போக்கிற்கு மத்தியில் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் குமாரசாமி ஆகியோர் நேரில் சந்தித்து பேசியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story