விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு வழங்கப்படும் அபராத ரசீதில் தமிழ் இடம்பெறாவிட்டால் தி.மு.க. சார்பில் போராட்டம்


விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு வழங்கப்படும் அபராத ரசீதில் தமிழ் இடம்பெறாவிட்டால் தி.மு.க. சார்பில் போராட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2019 11:15 PM GMT (Updated: 3 Nov 2019 8:20 PM GMT)

விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு வழங்கப்படும் அபராத ரசீதில் தமிழ் மொழி இடம்பெறாவிட்டால் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

புதுக்கோட்டை,

இன்றைய தினம் தமிழகத்தில் ரெயில்வே துறை, தபால் துறை ஆகிய துறைகளில் ஆங்கிலம், இந்தி மட்டுமே வருகின்றது. அதனை எதிர்த்து தி.மு.க. குரல் கொடுத்து, அந்த துறைகளில் தமிழில் வரவேண்டும் என்று போராடியது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அமைத்த கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்று நம்பர் ஒன் ஆக இருந்து கொண்டு வருகிறது.

இதனை சில ஊடகங்களும் மற்றவர்களும் முதல் வெற்றி பெற்று என்ன செய்யப்போகிறார்கள் என்று கேள்வி கேட்ட நேரத்தில், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும், டெல்லி நாடாளுமன்றத்தில் ஆரம்பத்திலேயே தமிழ் வாழ்க, பேரறிஞர் அண்ணா வாழ்க, பெரியார் வாழ்க, அம்பேத்கர் வாழ்க என்று தமிழிலேயே முழக்கமிட்டனர். அதுவே பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

அபராத ரசீதில் தமிழ்

சாலை போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதித்து வழங்கப்படுகின்ற ரசீதுகள் கூட ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் இருக்கின்றது என செய்திகள் வருகிறது. அதனை நீக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராத ரசீதுகளில் தமிழ் மொழி இடம்பெறவில்லை என்றால் தி.மு.க. சார்பில் இதற்காக மாபெரும் போராட்டத்தினை அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்த அரசு வெற்றி பெற்றுள்ளது. வரும் பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் சூழ்நிலை அதிக அளவில் உள்ளது. ஆகவே இந்த நேரத்தில் நீங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சி அமைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மீண்டும் வெற்றி பெறுவோம்

இதேபோல் திருமயம் அருகே உள்ள விராச்சிலையில் நடந்த ஒரு திருமண விழாவில் முக.ஸ்டாலின் பேசியதாவது:-

1967-க்கு முன்னர் சுயமரியாதை, சீர்திருத்த திருமணங்களை அரசு அங்கீகரிக்கவில்லை தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல் இது போன்ற திருமணங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டது. மனதில் எண்ணியதை அப்படியே பெரியார் பேசிவிடுவார். இதனை மக்கள் ஏற்கும் வகையில் மக்களிடத்தில் எடுத்து செல்வதில் அண்ணா திறமை மிக்கவர். பெரியார், அண்ணா, கலைஞர் இறந்தாலும் அவர்கள் கொள்கையுடன் தி.மு.க. கட்சி இருப்பதால் தான் தமிழ்நாடு தன்மானத்தோடு இயங்குகிறது.

கல்யாண மேடையில் அரசியல் பேசுவது தவறு இருந்தாலும் இது தி.மு.க. மேடை என்பதால் அரசியல் பேசலாம், அரசியல் பேசாமல் போனால் தி.மு.க. தொண்டர்கள் கவலைப்படுவார்கள் அதனால் தான் அரசியல் பேசுகிறேன். ஏதோ அண்மையில் நடைபெற்ற இரண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என ஆளும் கட்சியினர் பேசுகின்றனர். எதிர்வரும் பொது தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வென்றதை போல் மீண்டும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story