வத்தலக்குண்டு அருகே, கூரியர் நிறுவனத்தில் திருடிய 5 பேர் கைது


வத்தலக்குண்டு அருகே, கூரியர் நிறுவனத்தில் திருடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2019 11:00 PM GMT (Updated: 6 Nov 2019 1:53 PM GMT)

வத்தலக்குண்டு அருகே கூரியர் நிறுவனத்தில் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பட்டிவீரன்பட்டி, 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் மெயின்ரோட்டில் லயன்ஸ் நகர் உள்ளது. இந்த நகரில் தனியார் கூரியர் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தை கடந்த மாதம் 14-ந்தேதி அதன் மேற்பார்வையாளர் நவீன்குமார் திறக்க வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.85 ஆயிரம் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த எலக்ட்ரானிக் பொருட்கள், கணினி, செல்போன், ஆடைகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் என சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது.

இதுகுறித்து நவீன்குமார், பட்டிவீரன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் திருடிய செல்போன்களில் மர்மநபர்கள் புதிதாக சிம்கார்டு மாற்றி பயன்படுத்தி உள்ளனர். திருடப்பட்டு 1 மாதத்துக்கு மேல் ஆனதால் யாரும் நம்மை கண்டுபிடிக்கமுடியாது என எண்ணி விலை உயர்ந்த செல்போனில் சிம்கார்டை போட்டு பேசியுள்ளனர்.

இந்த செல்போனின் உள்ள ஐ.எம்.இ.ஐ. எண் வாயிலாக போலீசார் துப்புதுலக்கினர். அப்போது அதன்படி கூரியர் நிறுவனத்தில் திருடியது அய்யன்கோட்டையை சேர்ந்த மருதீஸ்வரன் (வயது 28), இளங்கோவன் (45), கார்த்திக் (19), விக்ரம் (18), தனபாண்டி (19) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள், சேவுகம்பட்டியில் உள்ள கள்ளர் பள்ளியில் பூட்டை உடைத்து அறிவியல் ஆய்வு கூடத்தில் இருந்த நுண்ணோக்கி, மோடம் உள்ளிட்ட பொருட்களையும் கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வத்தலக்குண்டு குரியர் நிறுவனத்தில் திருடிய செல்போன், வாட்ச், கேமரா உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story