‘புல்புல்’ புயல் எச்சரிக்கை காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை


‘புல்புல்’ புயல் எச்சரிக்கை காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 7 Nov 2019 4:30 AM IST (Updated: 6 Nov 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

‘புல்புல்’ புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

சேதுபாவாசத்திரம்,

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்திலும் சில இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இந்த நிலையில் வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு புதிய புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டு உள்ளது. ‘புல்புல்’ புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்களுக்கு நேற்று மீன்பிடிக்க செல்ல அனுமதி டோக்கன் வழங்கவில்லை. எனவே தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

134 விசைப்படகுகள்

சேதுபாவாசத்திரம் பகுதியில் கொள்ளுக்காடு முதல் செம்பியன்மாதேவிபட்டினம் வரை உள்ள 34 மீனவ கிராமங்களில் சுமார் 4500 நாட்டுப்படகுகளும், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இருந்த இடத்தில் கஜா புயலுக்கு பின் தற்போது 134 விசைப்படகுகள் தான் உள்ளது. திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் விசைப்படகுகளும் மற்ற தினங்களில் நாட்டுப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். தஞ்சை மாவட்டத்தில் உள்ள 134 விசைப்படகுகளும் கடலுக்கு செல்லாததால் துறைமுகம், மீன்ஏலக்கூடம், வலைபின்னும் இடம் போன்றவை வெறிச்சோடி கிடக்கிறது.

நிவாரணம்

இது குறித்த மீனவர்கள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு வீசிய கஜா புயலுக்கு பின் மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இதுவரை மீன்பிடி தொழில் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது.

தற்போது தான் மீன்பிடி சீசன் தொடங்கி உள்ளது. தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது வரை புயல் பாதிப்பு இல்லை. கஜா புயலால் படகுகளை இழந்த மீனவர்களுக்கு இதுவரை முழுமையான நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே படகுகளை இழந்த மீனவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story