திருச்சி விமான நிலையத்தில் 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் 130 வியாபாரிகளிடம் விசாரணை


திருச்சி விமான நிலையத்தில் 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் 130 வியாபாரிகளிடம் விசாரணை
x
தினத்தந்தி 6 Nov 2019 11:15 PM GMT (Updated: 2019-11-07T00:43:48+05:30)

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இது தொடர்பாக 130 வியாபாரிகளிடம் விசாரணை நடக்கிறது.

செம்பட்டு,

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாக விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் இங்கிருந்து உள்ளன.

ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் வந்து செல்கிறார்கள். இவ்வாறு சென்று வரும் பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை செய்த பிறகே அவர்களை விமான நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகளில் பலர் தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம், கடல்வாழ் உயிரினங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை கடத்தி வருவது சமீபகாலமாக மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து தினமும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து மத்திய சுங்கத்துறை வருவாய் புலனாய்வு பிரிவு துணை இயக்குனர் கார்த்திகேயன் தலைமையில் 22 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தின் உள்ளே அதிரடியாக நுழைந்தனர். இந்த குழுவில் சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மத்திய சுங்கத்துறை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இடம்பெற்று இருந்தனர்.

முதலில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் உள்ள பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய தொடங்கினர். இதைத்தொடர்ந்து துபாய், சார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானங்கள் வந்தன. அந்த விமானங்களில் வந்தவர்களையும் அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினார்கள்.

அப்போது, கடத்தல் குருவிகளாக செயல்பட்டு கொண்டிருந்த சுமார் 130 வியாபாரிகள் இந்த அதிரடி சோதனையின் போது அதிகாரிகள் பிடியில் சிக்கினார்கள். அவர்களை விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். இதில் சுமார் 12 வியாபாரிகள் மீது சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்கள் உடலில் பசை வடிவில் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்த அதிரடி சோதனையின் போது, ரூ.11 கோடி மதிப்புள்ள சுமார் 30 கிலோ எடைகொண்ட கடத்தல் தங்க நகைகள், கட்டிகள், கம்பி மற்றும் பசை வடிவிலும் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர்களிடம் இருந்து பல்வேறு விதமான மின்னணு சாதனங் களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்த சோதனை விடிய, விடிய நடந்தது. தொடர்ந்து 130 வியாபாரி களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story