திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கைகோரி மனு


திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கைகோரி மனு
x
தினத்தந்தி 7 Nov 2019 4:00 AM IST (Updated: 7 Nov 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

கரூர் (கருவூர்) மாவட்டத்தில் உள்ள ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

கரூர்,

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் பரவலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கருவூர் திருக்குறள் பேரவை செயலாளர் தமிழ்ச்செம்மல் மேலை பழநியப்பன் தலைமையில், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தென்னிலை கோவிந்தன், வையாபுரி நாகேந்திர கிருஷ்ணன், பேனா நண்பர் பேரவை திருமூர்த்தி, சதாசிவம், குமாரசாமி, தமிழுறவுப் பெருமன்றம் குமாரசாமி, வக்கீல் தமிழ் ராஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் கையில் தேசிய கொடியை பிடித்து கொண்டு, சிறிய அளவிலான திருவள்ளுவர் சிலையுடன் கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர், மாவட்ட கலெக்டர் அன்பழகனை சந்தித்து தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த நபர்களை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருவள்ளுவருக்கு சாதி, மதம், அரசியல் சாயம் பூச அனுமதிக்கக் கூடாது. கரூர் (கருவூர்) மாவட்டத்தில் உள்ள ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். பின்னர் தமிழ் அமைப்புகள் சார்பில் கலெக்டருக்கு சிறிய அளவிலான திருவள்ளுவர் சிலை பரிசாக வழங்கப்பட்டது. 

Next Story