லால்குடியில், நண்பனை கத்தியால் குத்திய வாலிபர் கைது


லால்குடியில், நண்பனை கத்தியால் குத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2019 10:00 PM GMT (Updated: 8 Nov 2019 12:59 PM GMT)

லால்குடியில் நண்பனை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

லால்குடி,

லால்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 28). இவர் திருச்சியில் தனியார் செல்போன் விற்பனை செய்யும் நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு, தனது நண்பரான லால்குடி கீழவீதியை சேர்ந்த விக்னேஸ்வரனை (26) தான் வேலை செய்து வந்த அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விக்னேஸ்வரனுக்கும் அந்த நிறுவனத்தின் மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, விக்னேஸ்வரன் மேலாளரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் அவரை பணியிடமாற்றம் செய்ததுடன், அவரை வேலைக்கு சேர்த்து விட்ட அருண்குமாரை அழைத்து மேலாளர் கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக அருண்குமார், விக்னேஸ்வரனை அழைத்து திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் மாலை அருண்குமாரை லால்குடி பிள்ளையார் கோவில் அருகில் வைத்து கத்தியால் சரமாரியாக குத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

 வலியால் அருண்குமார் அலறவே, பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். உடனே, விக்னேஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் கத்திக்குத்து பட்ட அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் லால்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் லால்குடி ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story