வேலூர் சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட முருகன் மறுப்பு


வேலூர் சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட முருகன் மறுப்பு
x
தினத்தந்தி 16 Nov 2019 4:30 AM IST (Updated: 15 Nov 2019 8:42 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மத்திய சிறையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள முருகன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்தியசிறையில் உள்ளார். அவருடைய அறையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டதால் அவருக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. பெண்கள் சிறையில் இருக்கும் அவருடைய மனைவி நளினியை சந்திக்கவும், முருகனை அவருடைய உறவினர்கள் சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

இதனை கண்டித்து முருகன் கடந்த மாதம் 18-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் நளினியை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 6-ந் தேதி உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

இந்த நிலையில் தனி அறையில் இருந்து வழக்கமான அறைக்கு மாற்றக்கோரி சிறை அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தார். ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் வேலூர் சிறையில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சென்னை புழல் சிறைக்கு மாற்றவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டதால் கடந்த 11-ந் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் முருகனை அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் சந்திக்க அனுமதிக்கக்கோரி, அவருடைய உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் நளினி மற்றும் உறவினர்கள் முருகனை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட அவருடைய வழக்கறிஞர்கள் அறிவுறுத்தவேண்டும் என்றும் கூறிஉள்ளனர்.

இதனை நேற்று சிறை அதிகாரிகள் முருகனிடம் தெரிவித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து 5-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவிட்டதற்கான நகலை வழக்கறிஞர்கள் கொடுத்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story