செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல், திருவாரூரில் நடந்தது


செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல், திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 16 Nov 2019 4:00 AM IST (Updated: 16 Nov 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

திருவாரூர் நகரின் முக்கிய பகுதியில் ஸ்ரீதேவி நகர், மாருதி நகர், சந்துரு நகர் அமைந்துள்ளது. இங்கு சுமார் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஸ்ரீதேவி நகரில் உள்ள எல்லா மனைகளிலும் வீடுகள் கட்டப்பட்டு குடியிருந்து வருகின்றனர். இதில் வீடுகளுக்கு இடையில் ஒரே ஒரு காலி மனை இருந்து வருகிறது. இந்த மனையில் தனியார் கம்பெனியின் செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

குடியிருப்பிற்காக அனுமதிக்கப்பட்ட மனையை வணிக நோக்கத்தில் செல்போன் கோபுரம் அமைப்பது சட்ட விதிமுறைக்கு எதிரானது. எனவே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு மீண்டும் அந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு செல்போன் கோபுரம் அமைக்க தேவையான தளவாட பொருட்கள் வந்து இறங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் எதி்ர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரம் அமைய உள்ள இடத்தின் அருகில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசன், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் செல்போன் கோபுரத்தை அமைக்க கூடாது. பணிகளை நிறுத்தி, இதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். செல்போன் கோபுரம் அமைப்பதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதால், சட்டப்படி நீதிமன்றத்தை நாடி தீர்வு செய்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story