தேனி கலெக்டர் அலுவலகத்தில், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் உள்பட 2 பேர் கைது
தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இங்கு மனு அளிப்பதற்காக தேனி அருகே உள்ள மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமசாமி மனைவி ஈஸ்வரி (வயது 57) என்பவர் வந்தார். அவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு தான் ஒரு கேனில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீஸ் ஒருவர் ஓடி வந்து அதனை தடுக்க முயன்றார். ஆனால், ஈஸ்வரி தரையில் படுத்துக் கொண்டு தீப்பெட்டியை எடுத்து தீப்பற்ற வைக்க முயன்றார். அப்போது அங்கு நின்ற வாலிபர் ஒருவர் அவருடைய கையில் இருந்த தீப்பெட்டியை பறித்தார்.
இதையடுத்து ஈஸ்வரியை போலீசார், அங்குள்ள தண்ணீர் தொட்டிக்கு அருகில் அமர வைத்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர். தீக்குளிக்க முயன்றது குறித்து ஈஸ்வரி கூறுகையில், ‘எனது கணவர் இறந்து விட்டார். மஞ்சிநாயக்கன்பட்டியில் எனக்கு சொந்தமான நிலத்தை வேறு ஒரு பெண் போலி ஆவணம் மூலம் அபகரித்துக் கொண்டார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நியாயம் கிடைக்கவில்லை. இதனால், தீக்குளிக்க முயன்றேன்’ என்றார்.
பின்னர் அவரை போலீசார் தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில், கலெக்டர் அலுவலகத்துக்கு போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த கண்ணப்பன் என்பவர் வந்தார். அவர் வைத்திருந்த பையில் ஒரு பாட்டிலில் பெட்ரோல் கொண்டு வந்தார். பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்ற முயன்ற போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். உடனே அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி அவரையும் தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், தன்னிடம் ரூ.3 லட்சம், 3 பவுன் நகையை ஒருவர் வாங்கிவிட்டு மோசடி செய்து விட்டதாகவும், அதுகுறித்து பல முறை மனு அளித்தும் நீதி கிடைக்காததால் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீதும் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.
அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story