மீன்சுருட்டி அருகே சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


மீன்சுருட்டி அருகே சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Nov 2019 4:30 AM IST (Updated: 20 Nov 2019 9:06 PM IST)
t-max-icont-min-icon

மீன்சுருட்டி அருகே சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் நான்கு வழிச்சாலையை அகலப்படுத்தி புதிதாக தார் சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக ஏற்கனவே இடம் அளக்கப்பட்டு, இருபுறமும் 100 மற்றும் 75 அடி இடத்தை நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியது. அதற்காக உரியவர்களுக்கு இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மீன்சுருட்டியை அடுத்த சொக்கலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி மற்றும் லாரி நிறுத்துமிடம் புதிதாக அமைக்கப்பட போவதாகவும், எனவே மீண்டும் இடம் அளந்து கையகப்படுத்த போவதாகவும் பொதுமக்களிடத்தில் தகவல் பரவியது. இது அப்பகுதி மக்களிடத்தில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

4 பேர் தீக்குளிக்க முயற்சி

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சொக்கலிங்கபுரம் உள்பட 5 கிராம மக்கள் நியாயம் கேட்டு, நேற்று திடீரென சாலை அமைக்கும் அலுவலகம் முன்பாக அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் இங்கு வந்து உரிய விளக்கம் தந்தால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று போலீசாரிடம் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே பேச்சுவார்த்தை நடத்த உயர் அதிகாரிகள் வர தாமதமானதால் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ராமதாஸ்(வயது 35), அந்தோணி என்கிற செந்தில்குமார்(30), மணிபாரதி(38), சக்திவேல்(40) ஆகிய 4 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து தங்களது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பிடுங்கி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

அதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story