குவைத் நாட்டில் கொடுமைக்குள்ளாகும் மகளை மீட்டு தர வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு


குவைத் நாட்டில் கொடுமைக்குள்ளாகும் மகளை மீட்டு தர வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு
x
தினத்தந்தி 26 Nov 2019 4:15 AM IST (Updated: 25 Nov 2019 11:19 PM IST)
t-max-icont-min-icon

குவைத் நாட்டில் கொடுமைக்குள்ளாகும் தனது மகளை மீட்டு தர வேண்டும் என திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் கோரிக்கை மனு அளித்தார்.

திருவாரூர்,

முத்துப்பேட்டை ஒன்றியம் சோழி செட்டியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பிச்சையம்மாள், தனது பேத்தி சுருதி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று மாவட்ட கலெக்டர் ஆனந்திடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் சோழி செட்டியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பிச்சையம்மாள். இவருடைய மகள் சாந்தி. இவருக்கு திருமணமாகி சுபா‌ஷினி, சுருதி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் எனது மகள் குழந்தைகளை வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதால் புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் மூலம் கடந்த 4-ந் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.

கொடுமை

அங்கு அவருக்கு எந்த வேலையும் வழங்கப்படாமல் தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர். உணவு கூட கொடுக்கப்படாமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதில் எனது மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக குவைத் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசி மகள் சுருதிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனவே எனது மகள் சாந்தியை உடனடியாக மீட்டு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்று கொண்ட கலெக்டர் ஆனந்த் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதேபோல் நாகை செல்வராஜ் எம்.பியை சந்தித்து மனு அளித்தனர்.

Next Story