இலவச மடிக்கணினி வழங்கக்கோரி கோவில்பட்டியில் 2-வது நாளாக மாணவிகள் போராட்டம்
இலவச மடிக்கணினி வழங்கக்கோரி, கோவில்பட்டியில் 2-வது நாளாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-2018, 2018-2019-ம் ஆண்டுகளில் பயின்ற பிளஸ்-2 மாணவிகள் 1,092 பேருக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து அந்த மாணவிகள் தங்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வலியுறுத்தி, கடந்த 25-ந்தேதி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர். தொடர்ந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2018-2019-ம் ஆண்டு பயின்று, தற்போது உயர்கல்வி பயிலும் மாணவிகள் 497 பேருக்கு இலவச மடிக்கணினி நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-2018-ம் ஆண்டு பயின்ற மாணவிகள் தங்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று முன்தினம் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் 2-வது நாளாக நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உதவி கலெக்டர் விஜயா அலுவலக பணிக்காக வெளியில் சென்று இருந்தார். இதையடுத்து மாணவிகளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு போலீசார் அழைத்து சென்று, தலைமை ஆசிரியை (பொறுப்பு) ரூத் ரத்தினகுமாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தலைமை ஆசிரியை கூறுகையில், இன்னும் ஒரு வாரத்தில் தமிழக அரசிடம் இருந்து 595 மடிக்கணினிகள் பெறப்பட்டு, 2017-2018-ம் ஆண்டு பிளஸ்-2 பயின்ற மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து மாணவிகள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story