கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த மழை, அதிகபட்சமாக உளுந்தூர்பேட்டையில் 131 மி.மீ பதிவானது


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த மழை, அதிகபட்சமாக உளுந்தூர்பேட்டையில் 131 மி.மீ பதிவானது
x
தினத்தந்தி 1 Dec 2019 10:15 PM GMT (Updated: 2 Dec 2019 12:55 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக உளுந்தூர்பேட்டையில் 131 மில்லி மீட்டர் மழை பதிவானது.

உளுந்தூர்பேட்டை,

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.

இதற்கிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழைபெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது வெயிலும் அடித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை வரை விடிய விடிய கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்தது. குறிப்பாக உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது.

இதனால் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நின்றது. ஆங்காங்கே சில இடங்களில் குடியிருப்புகளை சுற்றியும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். மேலும் உளுந்தூர்பேட்டை அருகே அதையூர் அரசு பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இது தவிர தொடர்மழையால் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. இதேபோல் கள்ளக்குறிச்சி, மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலூர், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அவைகளும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது கூடலூர் கிராமம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்து மக்கள் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் போன்ற பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால், அந்த பகுதியில் ஓடும் ஆற்றை கடந்து, மோட்டாபட்டி கிராமத்துக்கு வந்து தான் பஸ் ஏறி செல்ல முடியும்.

ஆற்றில் மழைக்காலங்களில் மட்டும் அதிகளவிலும், சாதாரண காலங்களில் குறைந்த அளவிலும் தண்ணீர் ஓடும். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் மழை அதிகளவில் பெய்து வருவதால், இந்த ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கூடலூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆற்றை கடப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

பலர் ஆற்று தண்ணீரை கண்டு அஞ்சி, வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும் ஒருசிலர் ஆபத்தான முறையில் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தபடி ஆற்றை கடந்து செல்கின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கூடலூர்-மோட்டாபட்டி கிராமங்களுக்கு இடையே, உள்ள ஆற்றை கடந்து தான் நாங்கள் கள்ளக்குறிச்சி போன்ற நகர பகுதிகளுக்கு சென்று வருகிறோம். ஆற்றில் தண்ணீர் அதிகமாக ஓடுகையில், எங்களால் எளிதாக சென்ற வர முடிவதில்லை. எனவே நாங்கள் படும் இன்னல்கள் குறித்தும், அங்கு பாலம் கட்டி தரக்கோரியும் பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக உளுந்தூர்பேட்டையில் 131 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல் திருக்கோவிலூரில் 53 மில்லி மீட்டரும், கள்ளக்குறிச்சியில் 68 மில்லி மீட்டரும், சங்கராபுரத்தில் 35 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

Next Story