கலைந்து செல்லாத கார்மேகக்கூட்டம்: திண்டுக்கல்லில் கொட்டித்தீர்த்த மழை


கலைந்து செல்லாத கார்மேகக்கூட்டம்: திண்டுக்கல்லில் கொட்டித்தீர்த்த மழை
x
தினத்தந்தி 1 Dec 2019 10:15 PM GMT (Updated: 1 Dec 2019 5:21 PM GMT)

கலைந்து செல்லாத கார்மேகக்கூட்டத்தால் திண்டுக்கல்லில் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது.

திண்டுக்கல், 

திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இரவில் பலத்த மழையாகவும், பகல் முழுவதும் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது. அத்துடன் அதிகாலையில் குளிர் காற்றும் வீசுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திண்டுக்கல் நகரின் முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதே போல் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது.

நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது. நேற்று பகலிலும், வானில் திரண்ட கார்மேகக்கூட்டம் கலைந்து செல்லாததால் காலை 11 மணி வரை மழை பெய்தது. பின்னர் மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் மழை கொட்டித்தீர்த்தது. மழை காரணமாக விடுமுறை தினமான நேற்று, சிறுவர்கள் தங்களின் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். நாகல்நகர், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் குடை பிடித்தபடியே பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். திண்டுக்கல்லில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி 21.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ,திண்டுக்கல் தீயணைப்பு நிலையம் மற்றும் நகரின் பிரதான சாலைகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகளின் நடுவில் பெரிய அளவிலான பள்ளங்களும் உருவாகியுள்ளன. அதில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் அப்பகுதியை கடக்க முயலும் போது விபத்துகளும் ஏற்படுகின்றன.

மழைக்காலங்களில் சாலைகளில் இதுபோன்று பள்ளங்கள் ஏற்படும் போது அவற்றை தற்காலிகமாகவே அதிகாரிகள் சீரமைக்கின்றனர். இதனால் சாலைகள் மேலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில் உள்ளன என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சாலைகளை தற்காலிகமாக சீரமைக்காமல் புதிதாக தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story