உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை அரசு முறையாக அறிவிக்கவில்லை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை அரசு முறையாக அறிவிக்கவில்லை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Dec 2019 11:15 PM GMT (Updated: 1 Dec 2019 6:16 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை அரசு முறையாக அறிவிக்கவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளை சேர்ந்த பா.ஜனதா, அ.தி.மு.க. அ.ம.மு.க., நாம் தமிழர் மற்றும் பல்வேறு கட்சியினர் 500-க்கும் மேற்பட்டவர்கள், டாக்டர் சந்திரசேகரன் தலைமையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மாற்றுக்கட்சியில் இருந்து விலகி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க.வில் இணைந்ததை பாராட்டுகிறேன். அ.தி.மு.க. அரசு, நாட்டை கொள்ளையடித்து வருகிறது.

கோபம் வருகிறது

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி விமர்சனம் செய்தால், அவரது ஊழலை வெளிப்படுத்தினால் அவருக்கு கோபம் அதிகமாக வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் தி.மு.க. அணி வெற்றி பெற்றது. இதனை ஜனநாயகத்தின் படி ஏற்று கொண்டோம். இடைத்தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்தது பற்றி ஆய்வு நடத்தி வருகிறோம்.

தி.மு.க. ஜனநாயகத்தை ஏற்கும் கட்சி. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று ஏற்று கொள்ளும் கட்சி. பொய் சொல்லி ஓட்டு வாங்கினோம் என்று அ.தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. 3 ஆண்டுகளாக நடத்தவில்லை.

நாடகம்

ஆட்சியில் இருப்பவர்கள் தான் தேர்தலை நடத்த வேண்டும். அதை ஆளுங்கட்சி செய்யவில்லை. தி.மு.க. தான் உள்ளாட்சி தேர்தலுக்கு கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியது என்று கூறி நாடகமாடுகிறார்கள். தி.மு.க. எதை நினைத்தாலும் செய்து விடும் என்றால் தி.மு.க. தானே பெரிய கட்சி. இதை நீங்களே ஏற்று கொண்டு விட்டீர்கள். உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை, அரசு முறையாக அறிவிக்கவில்லை.

இதுகுறித்து பல முறை மாநில தேர்தல் ஆணையத்திடம் கேட்டோம். உரிய பதில் அளிக்காததால் தற்போது கோர்ட்டை நாடினோம். சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் உத்தரவிட்டும், இட ஒதுக்கீட்டை முறையாக செய்யவில்லை.

புதிய பிரதிநிதிகள்

தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற உள்ள புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் கிராம மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். விரைவில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மலரும்.இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கே.என்.நேரு, அன்பழகன், கோவி.செழியன், நீலமேகம், ராமலிங்கம் எம்.பி., தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கல்யாணசுந்தரம், துரை.சந்திரசேகரன், பூண்டி கலைவாணன், நிவேதாமுருகன், நகர செயலாளர் தமிழழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குட்டி தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கணேசன், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story