பெலகாவி பிரசாரம் திடீர் ரத்து: வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் ஆஜர் - 45 நிமிடங்கள் விசாரணை


பெலகாவி பிரசாரம் திடீர் ரத்து: வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் ஆஜர் - 45 நிமிடங்கள் விசாரணை
x
தினத்தந்தி 2 Dec 2019 11:59 PM GMT (Updated: 2 Dec 2019 11:59 PM GMT)

பெலகாவி பிரசாரத்தை நேற்று திடீரென்று ரத்து செய்த டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 45 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. வரி ஏய்ப்பு செய்ததாகவும், ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்ததாகவும் டி.கே.சிவக்குமார் மீது குற்றம்சாட்டப்பட்டன.

இதுதொடர்பாக டி.கே.சிவக்குமாரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். டி.கே.சிவக்குமாரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் டெல்லியில் வைத்து கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது உரிய தகவல்கள் அளிக்கவில்லை எனக்கூறி அவரை அதிகாரிகள் கைது செய்தனர். 50 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த சிவக்குமாருக்கு டெல்லி ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

டெல்லி திகார் சிறையில் இருந்து பெங்களூரு வந்த டி.கே.சிவக்குமார் சில நாட்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்தார். அதன்பிறகு அவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. தற்போது 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் கடந்த சில நாட்களாக அவர் ஒவ்வொரு தொகுதிகளுக்கும் சென்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நேற்று முன்தினம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் மற்றும் இரேகெரூர் தொகுதிகளில் டி.கே.சிவக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று பெலகாவி மாவட்டம் அதானி, காக்வாட் தொகுதிகளில் அவர் வாக்கு சேகரிக்க இருந்தார். ஆனால் திடீரென்று அவர் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு பெங்களூரு வந்தார். வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டி இருந்ததால் அவர் பிரசாரத்தை ரத்து செய்தது தெரியவந்தது.

நேற்று காலையில் 10.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டிய டி.கே.சிவக்குமார் நேற்று மதியம் சுமார் 3.30 மணிக்கு குயின்ஸ் ரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு சென்று ஆஜரானார். அப்போது 2016-17-ம் ஆண்டில் வரி செலுத்துவதில் குளறுபடி செய்ததாக கூறிய அதிகாரிகள் அதுதொடர்பான விவரங்களை டி.கே.சிவக்குமாரிடம் கேட்டனர். இதற்கு டி.கே.சிவக்குமார் பதில் அளித்தார்.

மேலும் அதுதொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க இடைத்தேர்தல் முடியும் வரை அவகாசம் வழங்கும்படி டி.கே.சிவக்குமார், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு மாலை சுமார் 4.15 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த டி.கே.சிவக்குமார் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவரிடம் நிருபர்கள் பேட்டி காண முயன்றனர். ஆனால் டி.கே.சிவக்குமார் பேட்டி அளிக்காமல் கையெடுத்து கும்பிட்டபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

பெலகாவி பிரசாரத்தை பாதியில் விட்டு விட்டு டி.கே.சிவக்குமார் நேற்று உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து 30 நோட்டீசு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் தொடர்பான விசாரணையை நவம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் அதிகாரிகள் முடிக்க நினைத்து இறுதி அறிக்கை தயாரிக்க இருந்தனர். ஆனால் டி.கே.சிவக்குமார் விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ‘ஷோ-காஸ்’ நோட்டீசு அனுப்பியுள்ளனர். அதில் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதனால் தான் டி.கே.சிவக்குமார் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு விசாரணைக்கு ஆஜரானதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Next Story