கர்நாடக மாநில பகுதியில் புயலில் சிக்கிய குமரி மீனவர்கள் 188 பேர் கப்பல் மூலம் மீட்பு


கர்நாடக மாநில பகுதியில் புயலில் சிக்கிய குமரி மீனவர்கள் 188 பேர் கப்பல் மூலம் மீட்பு
x
தினத்தந்தி 5 Dec 2019 4:45 AM IST (Updated: 4 Dec 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநில பகுதியில் புயலில் சிக்கி தவித்த குமரி மீனவர்கள் 188 பேர் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது 22 விசைப்படகுகளும் கடலில் மூழ்கியதாக தெரிகிறது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் தூத்தூர் மண்டல பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் சுமார் 45-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கர்நாடக மாநிலம் மங்களூரு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட புயல் காற்றில் இந்த விசைப்படகுகள் அனைத்தும் சிக்கி, மீனவர்கள் கடலில் தவித்தனர்.

அப்போது அந்த வழியாக லட்சத்தீவு கவரத்தீவு பகுதிக்கு சென்று கொண்டிருந்த தனியார் கப்பல் ஒன்று கடலில் தவித்்த குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 188 பேரை மீட்டு கப்பலில் ஏற்றினர். ஆனால் அவர்களுடைய 22 விசைப்படகுகளும் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

அரசுக்கு கோரிக்கை

மீட்கப்பட்ட மீனவர்கள் சென்னையில் தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குனரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்து தங்களை கரைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

தகவல் கிடைத்ததும், எங்களுடைய அமைப்பு சார்பாக மீன்வளத்துறை இயக்குனரை தொடர்பு கொண்டு பேசினோம். அவரும் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். அப்போது அவரிடம், மீட்கப்பட்ட மீனவர்களை கரைக்கு கொண்டு வருவதற்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, கடற்படையை சேர்ந்த கப்பல் மூலம் 188 மீனவர்களையும் கரைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்தார். இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீனவ கிராமத்தில் அதிகாரிகள்...

இதற்கிடையே மீனவர்கள் மாயம் தொடர்பாக மாவட்ட மீன்வளத்துறை இயக்குனர் இளம் வழுதி, துணை இயக்குனர் மோகன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று வள்ளவிளை பகுதிக்கு வந்தனர்.

உடனே ராஜேஸ்குமார் எம்.எல்.ஏ.வும் அங்கு விரைந்து வந்தார். பின்னர் அவர்கள் மீனவ பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஆழ்கடலில் பரிதவித்து வரும் மீனவர்களை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் மாயமான மீனவர்களின் விவரங்களையும் சேகரித்தனர்.

மீனவர்கள் குற்றச்சாட்டு

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஒகி புயல் தாக்கியதில் குமரி மாவட்ட மீனவர்கள் அதிக அளவில் இறந்தனர். முறையான தகவல் பரிமாற்றம் இல்லாமல் போனதால்தான் உயிர் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு சேட்டிலைட் கருவி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் நேரிடையாக கோரிக்கை வைத்தோம்.

இதனை தொடர்ந்து சேட்டிலைட் கருவியை ஒரு சில படகுகளுக்கு வழங்கி உள்ளனர். இந்த சேட்டிலைட் கருவிகள் துறைமுக பகுதியில் இருந்து சுமார் 400 நாட்டிக்கல் தொலைவிற்கு உட்பட்ட பகுதிக்குள் தான் தகவல் பரிமாற்றம் செய்ய முடிகிறது. இதனால் 500 முதல் 1000 நாட்டிக்கல் தொலைவில் தொழில் செய்யும் மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாமலும் அவர்களுக்கு புயல் சம்பந்தப்பட்ட எச்சரிக்கை தகவல்களை‌ பரிமாறி கொள்ள முடியாத நிலையும் உள்ளது என குற்றம்சாட்டினர். மேலும் 9 விசைப்படகுகளில் சென்ற மீனவர்களை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை எனவும் தெரிவித்தனர்.

ராஜேஸ்குமார் எம்.எல்.ஏ.

இதுகுறித்து ராஜேஸ்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் தொழில் செய்பவர்கள். இதனால் அவர்களுக்கு புயல் போன்ற எச்சரிக்கை தகவல்களை எளிதில் பரிமாறிக்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், படகுகளுக்கு ஆர்.டி எனப்படும் ரேடியோ தொலைபேசிகள் வழங்க வேண்டும்.

தேங்காப்பட்டணம் துறைமுக பகுதியில் கட்டுப்பாட்டு அறை அலுவலகம் திறக்கப்பட்டு, உயர் கோபுரம் அமைத்து கடலில் ஆபத்து காலங்களில் மீனவர்கள் 2000 நாட்டிக்கல் தொலைவில் இருந்தாலும் தொடர்பு கொள்ளும் நிலையில் தகவல் தொடர்பு உபகரணங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஆழ்கடலில் பரிதவித்து வரும் மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய கடலோர கப்பல் படையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story