இன்று, பாபர் மசூதி இடிப்பு தினம்: நெல்லை- தென்காசி மாவட்டங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


இன்று, பாபர் மசூதி இடிப்பு தினம்: நெல்லை- தென்காசி மாவட்டங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 6 Dec 2019 3:45 AM IST (Updated: 6 Dec 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) வருவதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

நெல்லை, 

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) வருவதையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர கூடங்குளம் அணுமின்நிலையம், விஜயநாராயணம் கட்டபொம்மன் கடற்படை தளம் ஆகியவற்றில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இது குறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகா‌‌ஷ் மீனாவிடம் கேட்ட போது, “நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 2 ஆயிரத்து 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பதற்றமான ஊர்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரோந்து பணியை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 13 அதிரடிப்படை வாகனங்கள் மாவட்டங்களில் ரோந்து சுற்றி வரும்“ என்றார்.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோ தலைமையில் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜூலியட் மற்றும் போலீசார் தீவிர சோதனை செய்தனர். தண்டவாளம், ரெயில் நிலைய பகுதிகள், நடைமேடைகள், சோதனை செய்யப்பட்டன.

ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் அனைத்து உடமைகளும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டன. இதுபோல் நெல்லை மாநகர பகுதியிலும் போலீஸ் கமி‌‌ஷனர் தீபக் டமோர் உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், வாகன காப்பகம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. மாநகர பகுதியில் சுமார் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர்.

Next Story