சொத்து தகராறில் தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு - அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேர் கைது
பாளையங்கோட்டையில் சொத்து தகராறில் தந்தை-மகனை அரிவாளால் வெட்டிய வழக்கில், அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை தெற்கு பஜார் பட்டினத்தார் தெருவை சேர்ந்தவர் பூதத்தான் (வயது 85). இவருடைய மூத்த மனைவியின் மகன் மகாலிங்கம் (45). 2-வது மனைவியின் மகன் முருகன் (40). இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சொத்துக்கள் தொடர்பாக முருகனுக்கும், பூதத்தானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே அவ்வப்போது தகராறு நடந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு முருகன், மகன் கஜேந்திரனுடன் பூதத்தான் வீட்டுக்கு சென்றார். அங்கு மகாலிங்கம் அவருடன் இருந்துள்ளார். அப்போது பூதத்தானிடம் தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை தருமாறு முருகன் கேட்டு உள்ளார். இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகனும், கஜேந்திரனும் சேர்ந்து அரிவாளால் பூதத்தான் மற்றும் மகாலிங்கம் ஆகியோரை சரமாரியாக வெட்டினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன் (42), அவருடைய மனைவி சாந்தி (42), மகன் கஜேந்திரன் (23) ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story