வாகனம் மோதி சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்ட கம்பம் சேதம்


வாகனம் மோதி சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்ட கம்பம் சேதம்
x
தினத்தந்தி 7 Dec 2019 10:30 PM GMT (Updated: 7 Dec 2019 6:52 PM GMT)

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்ட கம்பம் சேதம் அடைந்தது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும் என மாவட்டகாவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கரூரில் விபத்து சம்பவங்களின் போது உரிய முறையில் விசாரணை நடத்துவதற்கும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை அடையாளம் காணும் பொருட்டும் தேசியநெடுஞ்சாலை, புறவழிச்சாலையில் விபத்து அடிக்கடி நடக்கிற இடங்கள் கண்டறியப்பட்டு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்ட கம்பம் வைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவாகும் காட்சிகளை ஆங்காங்கேயுள்ள சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் கணினி மூலம் போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

சி.சி.டி.வி. கேமராக்கள்

அந்த வகையில் கரூர் பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு மதுரை பைபாஸ் ரோட்டில் பெரியார் வளைவு அருகே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்ட கம்பம் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அந்த கம்பத்தில் மோதியதில் அது முறிந்து கீழே சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் சி.சி.டி.வி. கேமராக்கள் சேதம் அடைந்து அந்தரத்தில் தொங்கி கொண்டு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மர்ம நபர்கள் அதனை திருடி செல்ல வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சேதம் அடைந்த சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப் பட்ட கம்பத்தினை சீர்செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story