தும்மக்குண்டு பகுதியில், மழை சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் மழை சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடமலைக்குண்டு,
வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் சீலமுத்தையாபுரம், மேல்வாலிப்பாறை, கோமாளிகுடிசை உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் தற்போது வரை 15-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. இதனால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி மற்றும் அதிகாரிகள் தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மழை சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட அதிகாரிகள் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். மேலும் கடந்த மாதம் மூலவைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு தும்மக்குண்டு ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ஆய்வின் முடிவில் அந்த கிராமங்களில் முறையாக சாக்கடை வடிகால் தூர்வாரப்படுகிறதா? துப்புரவு பணியாளர்கள் மூலம் குப்பைகள் முறையாக அகற்றப்படுகிறதா? என பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது கோமாளிகுடிசை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது, கடமலை-மயிலை ஒன்றிய ஆணையாளர்கள் திருப்பதிவாசகன், சுரேஷ், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், தும்மக்குண்டு ஊராட்சி செயலர் சின்னச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story