வார்டை மறுவரையறை செய்யக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்


வார்டை மறுவரையறை செய்யக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2019 10:30 PM GMT (Updated: 2019-12-09T00:17:20+05:30)

மடத்துக்குளம் அருகே வார்டை மறுவரையறை செய்யக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மடத்துக்குளம், 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ளது துங்காவி ஊராட்சி. துங்காவி, பெங்களூர், குமாரமங்கலம், பாறையூர், சீலநாயக்கன்பட்டி, தாமரைபாடி, உடையார்பாளையம், வஞ்சிபுரம், மளையான்டிபட்டிணம், வெங்கிட்டாபுரம் ஆகிய 10 கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் நவநீதராஜா (வயது 35). இவர் துங்காவி மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் சமூக ஆர்வலர் ஆவார். கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது, துங்காவி ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு பகுதி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வார்டில் போட்டியிட 26.9.2016 அன்று இவர் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போதைய சூழ்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிக்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியானது. இதில் துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு தற்போது பொதுப்பிரிவிலிருந்து, பொதுப்பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதை தெரிந்து கொண்டார்.

பின்னர் அந்த நாளில் இருந்து தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இதனை மீண்டும் பழையபடி பொதுப்பிரிவினருக்கு மாற்றித்தரும்படி கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் அவரது கோரிக்கைக்கு அதிகாரிகள்எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

இதன் காரணமாக பொறுமை இழந்த நவநீதராஜா நேற்று காலை 10 மணி அளவில் துங்காவி பஸ் நிலையம் அருகில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அத்துடன் துங்காவி ஊராட்சி 9-வது வார்டு பகுதியை தற்போது ஒதுக்கீடு செய்துள்ள, பொது பெண்கள் பிரிவில் இருந்து, 2016-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்தது போல் மீண்டும் பொதுப்பிரிவினருக்கு மாற்றி மறு வரையறை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகையை கழுத்தில் அணிந்து இருந்தார். 120 அடி உயரமுள்ள அந்த செல்போன் கோபுரத்தில் சுமார் 60 அடி வரை ஏறிநின்றார். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் தனது செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர்ஓம்பிரகாஷ் மற்றும் கணியூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், காவல்துறை (தனிப்பிரிவு) செல்வராஜ், ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் செல்போன் கோபுரத்தில் ஏறிய நவநீதராஜாவிடம், உங்கள் கோரிக்கை எதுவானாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தலாம். ஆனால் தற்போது தங்களது உயிர் மற்றும் தங்களது குடும்பத்தினரின் நலன் கருதி கீழே இறங்கி வாருங்கள் என்று இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். இதனால் சமாதானம் அடைந்த நவநீதராஜா செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். களைப்பாக இருந்த நவநீதராஜாவுக்கு தேவையான உணவுகளை வழங்கி அருகில் உள்ள கணியூர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story