கார்த்திகை தீபத்திருநாள்: கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது


கார்த்திகை தீபத்திருநாள்: கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
x
தினத்தந்தி 10 Dec 2019 10:45 PM GMT (Updated: 10 Dec 2019 9:01 PM GMT)

புதுச்சேரியில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வீடுகளில் அகல் விளக்கேற்றி பெண்கள் வழிபட்டனர்.

புதுச்சேரி,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத்திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்கள், வீடுகளில் அகல் விளக்கேற்றி வழிபாடு நடைபெற்றது.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை மகாதீபம் ஏற்றப்பட்ட உடன் புதுவையில் உள்ள பெண்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி வீட்டு வாசலில் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டனர். இதனால் புதுவையில் உள்ள பெரும்பாலான தெருக்கள் விளக்குகள் வெளிச்சத்தில் ஜொலித்தன.

சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி புதுவையில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில், காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ் வரர் கோவில், பாரதி வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில், அரவிந்தர் வீதியில் உள்ள முத்தாலம்மன் கோவில், பிள்ளைத்தோட்டத்தில் உள்ள ஆனந்தமுத்துமாரியம்மன் கோவில், முத்தியால்பேட்டை கற்பக விநாயகர் கோவில், பொன்னுமாரியம்மன் கோவில், அரியாங்குப்பம் செங்கழுநீர் மாரியம்மன் கோவில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில், கோர்க்காடு எல்லையம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று இரவு கோவில்களின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

அகல்விளக்குகள் விற்பனை

கார்த்திகை திருநாளை முன்னிட்டு நேற்று பகலில் புதுவை பெரியமார்க்கெட், முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, சாரம் மார்க்கெட்டுகளில் களிமண் மற்றும் பீங்கான்களால் செய்யப்பட்ட அகல்விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அகல்விளக்குகள் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். இதனால் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலை மோதியது.


Next Story