கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தர்ணா
தேனி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி,
தேனி பாரஸ்ட்ரோடு 6-வது தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி. நேற்று இவர் தனது 2 குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டரின் கார் முன்பு குழந்தைகளுடன் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். பின்னர் அவரை மாவட்ட கலெக்டரிடம் போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அந்த பெண், கலெக்டர் பல்லவி பல்தேவிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் நடத்தி வந்த அறக்கட்டளையில் கணக்காளராக பணியாற்றி வந்தேன். அப்போது அவரும், தேனி பழைய அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரும் சேர்ந்து, என்னிடம் தொழில் மையம் மூலம் வங்கிக்கடன் பெற்று ஹாலோபிளாக் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கலாம் என்று கூறினர். நான் மறுத்த நிலையில், பங்குதாரராக இருந்து கற்கள் உற்பத்தி செய்து வரும் லாபத்தை மூவரும் பிரித்துக் கொள்வது என்று ஆசை வார்த்தைகள் கூறினர். பின்னர் தொழில் மையம் மூலம் ரூ.9 லட்சத்து 41 ஆயிரம் கடன் கிடைத்தது. அதை வைத்து கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் எந்திரங்கள் வாங்கி, க.விலக்கில் ஹாலோபிளாக் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி 2 ஆண்டுகளாக நடத்தி வந்தோம். வருடாந்திர கணக்கை சரிபார்த்து லாபத்தை பிரித்து தருமாறு கேட்டதற்கு, என்னை பினாமியாக தான் வைத்து இருந்ததாகவும், இனி அலுவலகத்துக்கு வர வேண்டாம் என்று கூறி அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதுகுறித்து விசாரித்தபோது, அவர்கள் இருவரும் சேர்ந்து கோவையில் எந்திரங்கள் வாங்கிய நிறுவனத்திடம் குறைந்த விலைக்கு எந்திரங்களை வாங்கிவிட்டு, மீதம் ரூ.6 லட்சத்தை திரும்பி வாங்கிக் கொண்டது தெரியவந்தது. எனக்கு லாபத்திலும் பங்கு தரவில்லை. எனவே, என்னை நம்பவைத்து மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நான் நிறுவனத்தை அச்சுறுத்தல் இன்றி நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
Related Tags :
Next Story