மதுரையில் வங்கி உதவி மேலாளர் வீட்டில் துணிகரம்: 97 பவுன் நகை-ரூ.1½ லட்சம் கொள்ளை


மதுரையில் வங்கி உதவி மேலாளர் வீட்டில் துணிகரம்: 97 பவுன் நகை-ரூ.1½ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 11 Dec 2019 11:00 PM GMT (Updated: 11 Dec 2019 9:48 PM GMT)

மதுரையில் வங்கி உதவி மேலாளர் வீட்டில் 97 பவுன் தங்க நகைகள், ரூ.1½ லட்சம் கொள்ளை போனது. அந்த வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு கைவரிசை காட்டிய மர்ம மனிதர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

மதுரை,

மதுரை கோவலன் நகர், அழகிரி 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 58). இவர் திருநகரில் உள்ள அரசு வங்கி ஒன்றில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கும், சென்னையை சேர்ந்த என்ஜினீயருக்கும் கடந்த மாதம் 29-ந் தேதி மதுரையில் திருமணம் நடந்தது.

அதன்பின்னர் மகளை மறுவீட்டிற்கு அழைத்து செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனசேகர் சென்னை சென்றார்.

அங்கு சென்னையில் தனியாக வீடு பார்த்து மகளை குடித்தனம் வைத்து விட்டு நேற்று முன்தினம் மதுரை வந்தார்.

அவர் வீட்டிற்குள் நுழைந்த போது முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது உள்ளே அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன.

மேலும் பீரோவில் வைத்திருந்த 97 பவுன் தங்க நகை, 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. உடனே அவர் இது குறித்து சுப்பிரமணியுபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது.

மேலும் வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் போலீசாருக்கு உடனடியாக துப்பு துலங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. போலீசார் அந்த பகுதியில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கொள்ளை நடந்த வீட்டில் 10 நாட்கள் ஆள் இல்லாமல் பூட்டி கிடந்துள்ளது. எனவே இதை நோட்டமிட்டு மர்ம மனிதர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என தெரியவருகிறது.

மேலும் இந்த துணிகர கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.

Next Story