தந்தை, மருமகன் கொடூர கொலை: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு


தந்தை, மருமகன் கொடூர கொலை: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 12 Dec 2019 10:00 PM GMT (Updated: 2019-12-13T03:27:13+05:30)

புதுவையில் தந்தை, மருமகனை கொடூரமாக கொலை செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுச்சேரி,

புதுச்சேரி கோரிமேடு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி வசந்தா (67). இவர்களுக்கு சகிலா (39) என்ற மகளும், சிவக்குமார் (35) என்ற மகனும் உள்ளனர். சகிலா ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி பரத் (12) என்ற மகன் இருந்தார். தனது தந்தை வீட்டில் மகனை தங்க வைத்து இருந்தார். சிவக்குமார் பிசியோதெரபிஸ்ட் படிப்பு படித்து இருந்தார்.

இந்தநிலையில் 19.4.2017 அன்று செல்வராஜ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் கோரிமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீடு முழுவதும் ரத்த கறையாக இருந்தது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த 16.4.2017 அன்று சொத்து பிரச்சினை காரணமாக தந்தை மற்றும் சகோதரி மகன் என்றும் பாராமல் செல்வராஜையும், பரத்தையும் சிவக்குமார் கொடூரமாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. அவர்களின் உடல்களை 2 நாட்கள் வீட்டில் வைத்திருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியதால் இருவரின் உடல்களையும் சிவக்குமார் துண்டுதுண்டாக வெட்டி 6 சாக்கு மூட்டைகளில் கட்டி புதுவையை அடுத்த தமிழகப் பகுதியான பூத்துறையில் குப்பை கிடங்கில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. கொலையை மறைக்க அவரது தாயார் வசந்தா உடந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து சகிலா அளித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், அவரது தாயார் வசந்தா ஆகியோரை கைது செய்தனர்.

இந்த பயங்கர இரட்டைக் கொலை சம்பவம் புதுவையில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தனபால் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், சாட்சிகளை மறைக்க முயற்சித்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி தனபால் தீர்ப்பளித்தார். வசந்தா விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் என்.கே.பெருமாள் ஆஜரானார்.

Next Story