குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: சேலத்தில் சட்ட நகலை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம் - 75 பேர் கைது
குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் சட்ட நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் நேற்று தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதன்படி, சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் அறிவழகன், சந்திரமோகன், மணிகண்டன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற கோரியும் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்கள் சட்ட நகலை கிழித்து வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சட்ட நகலை கிழிக்க விடாமல் அவர்களை போலீசார் தடுத்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார், வேனில் ஏற்றி சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். கைதானவர்களை சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார்.
Related Tags :
Next Story