மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு


மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 14 Dec 2019 11:00 PM GMT (Updated: 14 Dec 2019 5:40 PM GMT)

உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு்ள்ளது. அமணலிங்கேஸ்வரர் கோவிலையும் தண்ணீர் சூழ்ந்தது.

தளி,

உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதிகளில் உற்பத்தியாகின்ற கொட்டைஆறு, பாரப்பட்டிஆறு, வண்டிஆறு, குருமலைஆறு, கிழவிபட்டிஆறு, உப்புமண்ணம்பட்டிஆறு, நீராதாரமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்யும் போது ஆறுகளில் நீர்வரத்து ஏற்படுகிறது.

இதனால் பஞ்சலிங்க அருவியில் ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 6 மாத காலத்திற்கு நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில் குளிப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. மனஅழுத்தமும் குறைந்து விடுகிறது. இதனால் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

வெள்ளம் சூழ்ந்தது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் அவ்வப்போது நீர்வரத்து கூடுவதும் பின்பு குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை யொட்டி நேற்று காலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்தமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பஞ்சலிங்கஅருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கொட்டி வருகிறது. இதனால் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அருவியில் கொட்டும் வெள்ளம் அடிவாரப்பகுதியில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலையும் சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.

இதன் காரணமாக மும்மூர்த்திகளை வலம்வந்து சாமிதரிசனம் செய்ய முடியாத சூழல் நிலவியது. இதனால் கோவிலில் பூஜைகள் நடைபெறவில்லை. உண்டியல்கள் முன்னெச்சரிக்கையாக பிளாஸ்டிக் பைகள் கொண்டு கட்டப்பட்டிருந்தது.

பொதுமக்கள்

மேலும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தகவல் சுற்றுப்புற கிராமங்களில் பரவியது. அதைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் திருமூர்த்திமலையில் குவிந்தனர். அதுமட்டுமின்றி வெள்ளப்பெருக்கை புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் சமூகவலைதளங்களில் உற்சாகத்தோடு பதிவிட்டு வருகின்றனர். ஒருசிலர் ஆர்வமிகுதியின் காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு செல்வதற்கு முற்பட்ட னர். இதனால் கோவில் பணியாளர்கள் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story