குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி - கம்பத்தில் போராட்டம்-பேரணி; 774 பேர் கைது
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி கம்பத்தில் போராட்டம் நடத்திய 774 பேர் கைது செய்யப்பட்டனர்.
கம்பம்,
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், அந்த மசோதாவை வாபஸ் பெறக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும், முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தினர். தேனி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பெரியக்குளத்தில் முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி கம்பம் நகரில் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு கம்பம் வாவேர் பள்ளி வாசல் ஜமாத் கமிட்டி தலைவர் பாபா முகமது பதுருதீன் தலைமை தாங்கினார். செயலாளர் ஹாஜி, பொருளாளர் ஹாஜி அப்துல் அஜிஸ், தலைமை இமாம் ஹாஜி அலாவுதீன் மிஸ்பாஹி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை தி.மு.க. மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த பேரணி கம்பம் வாவேர் பள்ளி வாசலில் தொடங்கி, புலவர் தெரு, பாவலர் படிப்பகம், புது பள்ளிவாசல் வழியாக பழைய தபால் நிலையம் முன்பு நிறைவடைந்தது. இந்த பேரணியில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் அமைப்பினர், தி.மு.க., ம.தி.மு.க., அ.ம.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் பேரணியில் கலந்துகொண்டவர்கள் பழைய தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும், இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, இந்த நாட்டில் மதத்தின் பெயரில் குடியுரிமை அளிப்பதை ஏற்க முடியாது, இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்போம், இந்திய நாட்டை மத அடிப்படையில் பிரிவினை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 774 பேரை, உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story