மயிலாடும்பாறை அருகே, பள்ளி சமையலறை மேற்கூரை இடிந்து விழுந்தது - 2 மாணவர்கள் காயம்
மயிலாடும்பாறை அருகே பள்ளி சமையலறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
கடமலைக்குண்டு,
கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே பொன்னன்படுகை கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சமையலறை கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
அதனை இடித்து அகற்றிவிட்டு, புதிய சமையலறை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் புதிய சமையலறை கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் சேதமடைந்த நிலையில் இருந்த சமையலறை கட்டிடம் இடித்து அகற்றப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் முத்துப்பாண்டி, ஈஸ்வரன் மற்றும் 8-ம் வகுப்பு படித்து வரும் செல்வக்குமார் ஆகிய 3 மாணவர்கள் சேதமடைந்த சமையலறை கட்டிடத்துக்குள் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சமையலறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி 3 மாணவர்களும் கூச்சல் போட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஓடி வந்து 3 பேரையும் மீட்டனர். இந்த விபத்தில் செல்வக்குமார், ஈஸ்வரன் ஆகிய 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. தங்கப்பாண்டிக்கு காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மயிலாடும்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காயமடைந்த 2 மாணவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவர்கள் எதற்காக சேதமடைந்த சமையலறை கட்டிடத்துக்கு சென்றனர் என்பது குறித்து ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே பள்ளியில் சேதமடைந்த நிலையில் உள்ள சமையலறை கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story