குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் 2 இடங்களில் நடந்தது


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் 2 இடங்களில் நடந்தது
x
தினத்தந்தி 20 Dec 2019 4:30 AM IST (Updated: 20 Dec 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

க.பரமத்தி பகுதியில் 2 இடங்களில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், க.பரமத்தி முன்னூர் ஊராட்சியில் உள்ள கிரசர்மேடு, வேலம்பாளையம், அறிவொளி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒருவாரமாக காவிரிகூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை பரமத்தி-நொய்யல் தேசிய நெடுஞ்சாலையில், கிரசர்மேடு என்ற இடத்தில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த முன்னூர் ஊராட்சி செயலாளர் முருகேசன் மற்றும் க.பரமத்தி போலீசார், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதேபோல் க.பரமத்தி ஒன்றியம், குளம்நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக காவிரி கூட்டு குடிநீர் சரியாக வினியோகிக்கப்படவில்லை. மேலும் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், க.பரமத்தி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் வளர்மதி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Next Story