குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி உத்தமபாளையத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி உத்தமபாளையத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போடி (மீனாட்சிபுரம்),
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று உத்தமபாளையம் நகர முஸ்லிம் ஜமாத் மற்றும் நகர ஜமா அத்துல் உலமா சார்பில் முஸ்லிம்கள் உத்தமபாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பெரிய பள்ளி வாசல் ஜமாத் தலைவர் தர்வேஷ் முகைதீன் தலைமை தாங்கினார்.
வட்டார உலமாசபை செயலாளர் அகமது இப்ராகிம் பைஜி, கோட்டைமேடு பள்ளிவாசல் ஜமாத் தலைவர் பெரோஸ்கான், களிமேடு பள்ளி வாசல் ஜமாத் தலைவர் மீரான், பி.டி.ஆர் காலனி ஜமாத் தலைவர் கவுது முகைதீன், ஷாபி பள்ளி வாசல் ஜமாத் தலைவர் ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணண் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேசிய கொடியை கைகளில் ஏந்தியவாறு இந்தியா என் தாய்நாடு என்று முழக்கமிட்டனர்.
மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், இந்திய நாட்டை மத அடிப்படையில் பிரிவினை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்பம், கூடலூர், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் தி.மு.க., ம.தி.மு.க., அ.ம.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story