விழுப்புரம் மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ரூ.4 கோடி நகை, பணம் மீட்பு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட குற்றங்கள் குறைந்தது. ஓராண்டில் திருட்டு, கொள்ளை சம்பவங் களில் ரூ.4 கோடி மதிப்புள்ள நகை, பணம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் வழிகாட்டுதலின்பேரில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு 533 திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு குற்றங்கள் சற்று குறைந்துள்ளது.
அதாவது இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 422 திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. இவற்றில் 369 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து, ரூ.2 கோடியே 89 லட்சத்து 89 ஆயிரத்து 370 மதிப்பிலான நகைகள், பணம் மீட்கப்பட்டு நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் 112 கடும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 108 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ.1 கோடியே 29 லட்சத்து 12 ஆயிரத்து 350 மதிப்புள்ள நகை, பணம் மீட்கப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்கும்பொருட்டு 1,220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்ற ரவுடிகள் 17 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதுபோல் இந்த ஆண்டு 68 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கவும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்துவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மதுவிலக்கு தொடர்பாக 8,251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,462 பெண்கள் உள்பட 8,283 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இவர்களிடம் இருந்து 82,07,621 மதுபாட்டில்களும், 6,220 லிட்டர் எரிசாராயமும், 84,799 லிட்டர் சாராயமும், 1,72,475 லிட்டர் சாராய ஊரலும், 612 லிட்டர் கள்ளும், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் 4,860 கிலோ வெல்லமும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
சாராயம், மதுபாட்டில்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த 34 பேர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் சாலை விதிகளை மீறியதற்காக ரூ.3 கோடியே 33 லட்சத்து 51 ஆயிரத்து 120 அபராத தொகையாக பெறப்பட்டு அந்த தொகை அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துதல் உள்பட போக்குவரத்து விதிகளை மீறிய 35,342 பேரின் வாகன ஓட்டுனர் உரிமத்தை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மூலம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 1,501 பேர் தற்காப்பு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 856 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 24 பொக்லைன் எந்திரங்கள், 118 டிப்பர் லாரிகள், 94 லாரிகள், 105 டிராக்டர்கள், 1,018 மாட்டு வண்டிகள், 47 சரக்கு வாகனங்கள், 30 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் 339 லாட்டரி வழக்குகளில் 291 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருகி வரும் குற்றங்களை தடுக்கும் நோக்கில் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து 2,916 இடங்களில் 4,584 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வரப்பட்டதன் மூலமாக குற்ற சம்பவங்கள் பெருமளவில் குறைந்துள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story